இன்றைய ஒளியோவியம்

Oryx Antelope.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50376
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

 

கலைக் கனவுகள் 2010


 
“கலைக் கனவுகள்” 1993 ஆம் ஆண்டு நோர்வேவாழ் தமிழ்க்கலைஞர்களால் வெளியிடப்பட்ட ஒரு ஒளிஒலித்தொகுப்பாகும் 17 வருடங்களுக்குப் பின் கலைக்கனவுகள்2010 திரு. வே இரவிக்குமாரின் மாணவர்களால் Sandvika இல் நடாத்தப்பட்டது.


 
இந் நிகழ்வின் ஆரம்பமாக 17 வருடங்களுக்கும் முன் வெளியிடப்பட்ட கலைக் கனவுகள் 93 ன் சிறு தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரையிசைப் பாடல்களுக்கும் வே.இரவிக்குமாரின் இசைக்குமான பாடல்களுக்கும் நடனங்கள் இடம் பெற்றன. கலைக் கனவுகள் பற்றிய சிறுகுறிப்புகளை கவிஞர். இளவாலை விஜயேந்திரன் தனது உரையில் பரிமாறிக்கொண்டார்.


 
சிறப்புவிருந்தினராக வருகை தந்த கவிஞர். ஆதவன் அவர்களின் கவிதை மற்றும் கதாநிகழ்வு இங்கு ஒரு மாறுபட்ட கலைநிகழ்வை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. “தமிழியம் சுபாஸ்”  ன் குறும்படம் “எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?” திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றது. முத்தமிழ் அறிவாலயம் மற்றும் இரவிக்குமாரின் மாணவன் சுகேஸ் தானே எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை தனது குழுவினருடன் மேடையில் ரப் கலந்து பாடிக்காட்டினார்.

 

இடைவேளையைத் தொடர்ந்து இசைநிகழ்வு ஆரம்பமானது. மாணவர்களே அனைத்து இசைக்கருவிகளையும் இணைந்து ஒரு இசைக்குழுவாக இந்த நிகழ்வை வழங்கினர்.

 

 

இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பு விருந்தினராக திருமதி மல்லிகா நாகராஜா, திருமதி ஸ்ரீ வாசுகி ரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமெனச் சொல்வதென்றால் பல கருத்துவேறபாடுளைக் கொண்டவர்களையும் வேறு வேறு தளங்களில் தம்மை இணைத்துக்கொண்டவர்ளையும் இங்கு காணக்கூடயதாக இருந்தது.

 

இந்நிகழ்ச்சியின் மைனஸ் என்று சொல்வதென்றால் ஆரம்பத்தில் கால தாமதத்துடன் தொடங்கிய நிகழ்வு நீண்ட நேரத்தைப் பிடித்துக்கொண்டு தொய்வுகளை ஏற்ப்படுத்தியது.

 

பிரதம விருந்தினராக Stavanger நகரில் இருந்து வருகை தந்தவர் நோர்வே மண்ணில் அரங்கேறிய பல நாடகங்களுக்குச் சொந்தக்காரர் திரு. அன்ரனி தியோப்லஸ் அவர்கள். இவர் எழுதிய நாடகங்கள் ஏறத்தாள இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை. நோர்வே வாழ் மக்களும் கலைஞர்களும் பெறக்கூடிய விடயங்கள் பல உரையில் காணப்பட்டதால் திரு.அன்ரனி தியோப்லஸின் அவர்களின் உரையில் இருந்து நூர்தமிழ் வாசகர்களுக்காக…

 

" இச் சந்தர்பத்தில்; நோர்வேயில் கலை முயற்சிகளும், நாளைய இளம் தலைமுறை தேட வேண்டியது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

 

புலம்பெயர் கலைவடிவங்களில், அவை இலக்கியப் படைப்புகளாயினும், அரங்க நிகழ்கலைகளாயினும், அவற்றில் புலம்பெயர் வாழ்வியலும் தமிழ்த் தேசியவாதமும் பெரும் தாக்கத்தை கொண்டிருந்தன. இவை இரண்டும் சமனான தாக்கங்களை ஆரம்ப காலங்களில் செய்தாலும், பிற்காலங்களில் அப்படி இருக்கவில்லை

 

நோர்வேயில் எம்மவர்களின் கலை முயற்சிகளை மூன்று காலகட்டமாக பிரித்து பார்க்கலாம்.

1. புலம்பெயர்வு ஆரம்பமாகி 90 வரையிலான காலம். அப்போது புலம்பெயர் வாழ்வியல் தாக்கங்கள் அதிகமாகவும், தமிழ்த் தேசியம் உச்ச விழிப்புநிலை அடைந்த காலமாகவும் இருந்தது. இக் காலத்தில்தான் புலம்பெயர் இலக்கியம் பாடுபொருளாக்கப்பட்டு, நள்ளிரவில் கதிர் உலாவுவது பற்றியும், அலாஸ்காவில் ஒட்டகங்கள் பற்றியும், பைனும் பனையும் கை கோர்ப்பது பற்றியும், கறுப்பு பச்சை நீலம் சிகப்பு கடவுசீட்டுகள் பற்றியும் பேசப்பட்டன. இலங்கைத் தமிழரை, நோர்வே தமிழர் (norske tamiler) என அடையாளப்படுத்த தொடங்கினோம். நோர்வேயில் நாம் வாழும் வாழ்வை நாமே பதிவு செய்து கொள்ள மாத இதழ்களும் ஆரம்பிக்கப்பட்டன. சகலருக்கும் ஒரு தமிழ்ப் பாடசாலை தொடங்கப்பட்டது.

 

அப்போது தமிழ்த் தேசியமும் தாயக விடுதலையும் சகல மட்டத்திலும் பெரும் விழிப்புநிலையிலும் தோழமையுடனும் இருந்தபடியால், நட்புணர்வுடன் பல கூட்டு கலை வெளிப்பாடுகள் இடம்பெற்றன.  “சக்தி பிறக்குது” அதில் குறிப்படப்பட வேண்டிய அரங்க வெளிப்பாடாகும். பல்கருத்துடைய கலைஞர்களும் அப் படைப்புக்கு பங்களிப்பு செய்து இருந்தார்கள். அதன்பின்பு அத்தகைய கூட்டு முயற்சி இங்கே நடந்ததாக நினைவில் இல்லை.

 

2. 90களின் மத்தியல் இருந்து 2009 வரையிலான காலம். இக் காலகட்டத்தில் விழிப்புநிலையில் இருந்த தமிழ்த் தேசியம் பெரும் எழுச்சிநிலையை அடைந்தது. இதற்கு முன்னால் சுயவளர்ச்சி அடைய புலம்பெயர் இலக்கியத்தால் பெரிதளவு முடியவில்லை. தமிழ்த் தேசியத்துடன் கரைந்துவிடும் நிலையும், அல்லது உறைநிலை அடையும் நிலையே காணப்பட்டது. நோர்வேஜிய அரசு ஒப்புரவாகுதல் பற்றி (Integration)  எடுத்துரைக்கும் போது நாம் தமிழ் அரசைப் பாடுபொருளாக்கியே படைப்புகள் செய்து கொண்டிருந்தோம். இருப்பினும் தமிழ்ப் பாடசாலைகள், ஒரு சில அமைப்புகள் ஊடாக, நாம் இங்கு வாழும் வாழ்கையை பதிவு செய்யும் படைப்புகள் வெளிவந்தன. எமது இசையமைப்பாளர்களின் இசைவெளியீடுகளில் முதலாவதாக, 94ல் முரளிதரனின் புதுராகம் அரங்கேற்றம் எனும் ஒலிப்பேளை வெளியீட்டை தொடர்ந்து 95ல் ரவிராகம், இராகம்2000, இராகம்2001, சின்னப் பூக்கள் என இறுவட்டுகள் வெளிவந்தன. 

 

தமிழ்த் தேசியத்தின் எழுச்சியுடன் இணைந்த கலை முயற்சிகள் இங்கே பாரிய வளர்ச்சியை பெற்றன. தேசியம் பற்றிய அறிவூட்டலுக்கும், பரப்புரைக்கும், கலைவடிவங்கள் தேவைப்பட்டதால் மாதம் ஒரு அரங்கு என்னும் எண்ணிக்கைப்படி, அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

இதனால், பல கலைஞர்கள் உருவாகினார்கள். காத்திரமான படைப்புகளும் உருவாகின. இதில் இசைக் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இலங்கையின் ஈழத்துப் பாடல்கள் இங்கே “தாயகப் பாடல்” என்று பரிணாமம் பெற்றது. பல இசைவெளியீடுகள் வந்தன. இசைக் கலைஞர்கள் அமைப்புகளின் தேவை கருதி கடினமாக உழைத்த காலம் அது. எம்மவர்களின் வானெலியும் தொலைக்காட்சியும் இவர்களின் படைப்புக்களை மக்கள் மத்தியில் பரவலாக்கம் செய்திருந்தார்கள். தனியே தாயகப் பாடல்கள் மட்டும் இசைக்கப்படும் இசை நிகழ்சிகள் நடந்தன, அதிலும் சிறந்த இளம் பாடகர்களை தேர்வு செய்யும் போட்டி நிகழ்வுகளும் இடம் பெற்றன. இத்தகைய வளர்ச்சி இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி அத்துறையில் இளம் கலைஞர்களின் வருகையையும் ஊக்குவித்திருந்தது. தூய தமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டன.   

             

இவற்றை நாம் தேசிய எழுச்சியால் ஏற்பட்ட சிறந்த வளர்ச்சி நிலையாக கொள்ளலாம். ஆனால் இதன் மறுபக்கம், மீளாய்வு செய்யப்பட வேண்டிய தேவையும் இருந்தது. 

   

ஒற்றைத் தன்மை கொண்ட இறுக்கமான தேசியத்தின் போக்கு, மாற்று கருத்துள்ளவர்களின் கருத்துக்களை உள்வாங்கா தன்மையை தன் சுயமாக கொண்டு, அவர்களின் வருகைக்கான கதவையும் மூடி வைத்தது. பன்மைத்துவத்துக்கு இடமளிக்க மறுத்ததின் மூலம், அநேக படைப்புக்கள் ஒரே அலைவரிசையில் இருந்ததும் எமது கலை முயற்சிகளுக்கு ஏற்பட்ட துன்பியல் நிகழ்வுதான்.    

 

எழுதும் வரிகள் நிராகரிக்கப் பட்டபோது, “இந்தக் கைகளை எந்தக் கங்கையில் கழுவுவேன்” எனும் கவிதை வரிகளைப் போல், படைப்பாளிகள் பலரும் எழுதுவதை கை கழுவிக் கொண்டார்கள், அல்லது எழுதியபின் கைகழுவிக் கொண்டார்கள். இன்னும் சிலர் தம் முயற்சிகளில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்களாக இருக்கிறார்கள்.

 

3. 2009 இருந்து தொடங்கும் சமகாலம். தமிழ் தேசியத்தின் பெரும் எழுச்சி வீழ்ச்சி அடைந்த காலத்தில் இருக்கிறோம், இதன் எதிர்கால போக்கு புலத்தில் எப்படி இருக்கும் என இப்போது எதுவும் கூறமுடியாது. பூகம்பத்தின் பின் புற்கள் முளைக்க நாளெடுக்கும். ஆனால் உறைநிலையில் இருந்த புலம்பெயர் இலக்கியம் இனி உருகுநிலையை அடையும் என எதிர்பார்க்கலாம். படைப்பாளிகள் தம் படைப்புக்கான தீனியை இனி இங்கேதான், தேடிக் கொள்ள வேண்டும். இனிவர வேண்டிய புலம் சார்ந்த புதிய படைப்புகள், இங்குள்ள இளம் சந்ததியினரிடம் இருந்தே வரவேண்டும். இசையும் அது சார்ந்த கலையும் இனி புலத்தில் இவர்கள் வாயிலாகத்தான் புதுவடிவம் பெறும் என எதிர்பார்க்கிறோம்

 

அதற்காக சில விடயங்களை அவர்களிடம் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

எமக்கென புதிய இசைவடிவத்தை உருவாக்குவதற்கு முயற்சியுங்கள். Jazz, Rock, Metal, Hip-Hop, Techno, Tango, Folk music என பல வகையாக இருந்தாலும், Folk Music எனப்படும் மக்கள் இசை வடிவமே ஒரு இனத்தின் தனித்துவம் பேணும் இசையாக இருக்கிறது. எமக்குரிய இசைவடிவம் என்றவுடன் நாம் திராவிடம் சார்ந்த தமிழகத்தை ஆணிவேராக கொண்ட இசையையே பயன்படுத்துகிறோம். அது பாரம்பரிய இசை எனும் பயன்பாட்டில் இருக்கட்டும். இதில் எம்மை அடையாளப்படுத்தும் தனித்துவம் என்பது இல்லாமல் போகிறது. உதாரணத்துக்கு பஞ்சாப் மக்களின் பங்காரா, குஜராத் மக்களின் தாண்டியா, சிங்கள மக்களின் பைலா இசை. இவை அவர்களின் தனித்துவம் பேணும் இசையாக உள்ளது. பைலா இசை இலங்கைக்கு போத்துகியரின் வருகையுடன் 17ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்து. இதன் சாயலுடன் ஈழத்து தமிழ் பொப் இசையும் 70களில் பிரபலமாகி தனித்துவத்தை பெற்றது. தமிழகத்தில் 95களில் ஜனரஞ்சகப் படுத்தப்பட்ட கானா இசை மக்களின் மனதை வென்று தனி இடத்தை பிடித்தது.

 

புலம் பெயர் தமிழருக்கான புதிய மக்கள் இசைவடிவம் பற்றி துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களையும் பெற்று சற்றே சிந்தித்தித்துப் பாருங்கள். Norske tamiler என்று ஒப்புரவாக்கப்பட்ட உங்களின் அடையாளத்தை கருவாக கொண்டு அதனை ஆரம்பியுங்கள்.  Integrasjon உங்களுக்கு புதிதானது இல்லை. உங்களின் மேபைல் ஐபோன் உங்களின் கீபோட் யாவும் இப்போது integration தான் இயக்குகின்றது. பல தனித்தன்மைகளை ஒன்றிணைத்து வரும் வெளிப்பாடுதான் அவை. அப்படி ஒரு இசையை கற்பனை பண்ணி பாருங்கள், உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள்.

 

இசையை பயிலும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் ஒரு கனவு இருக்கும். உங்கள் கனவுக்கு உருவம் கொடுக்கும் முயற்சியாக இசைவெளியீடுகளை செய்யும் போது இசையை, பாடல்களை காட்சிப்படுத்தி (visual)  வெளியிடுங்கள். நோர்வேயில் தற்போது எம்மவர்களின் திரைப்படத்துறையும் வளர்ந்து வரும் நிலையில், அத்துறை சார்ந்தோருடன் இணைந்து பணியாற்றுங்கள். எந்த கலைமுயற்சிகளுக்கும் group work எனப்படும் கூட்டுக் குழுப் பணி என்பது முக்கியமாகும்.

 

 

எங்களது பொதுவான வெளியீடுகளில், உள்ளடக்கம் நன்றாக இருந்தாலும், வெளிப்படுத்தலும் சந்தைப்படுத்தலும் (Presenting & Marketting)  இன்னும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அந்தப் படைப்பு முழு வெற்றியை அடையாமல் முடங்கி கொள்கிறது. வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் இதில் முழுக் கவனத்தையும் செலுத்திட வேண்டும்.

 

இங்கு வளரும் சிறுவர்கள் (Freetime activity)  எனப்படும் ஆரோக்கியமான வழிகளில் தம் மிகுதி நேரங்களை செலவிடுவதை, வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டிருக்க வேண்டும். அத்தகைய நேரங்களை இசையில் செலவிடும் இவர்களுக்கு எனது வாழ்த்துகள். இசை அழகியல் கலை மட்டுமல்லாது, மனதை ஒருமைப்படுத்தும் ஆன்மீக தன்மையும் கொண்டது. அது நாம் கேட்கும் இசையைப் பொறுத்தது. அது ஒரு சிகிச்சை முறையாக, music theraphy  என பயன்பாட்டில் உள்ளது. மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப் படுகிறது.  அதனால் இத் துறையை நீங்கள் தெரிவு செய்ததிற்கு பாராட்டுகள்.

 

புலத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். ஐநெசநெவ க்குள் அவர்கள் சிறைப்பட்டு இருக்கிறார்கள். வீட்டில் ஒரு நாள் இன்ரநெற் இல்லாமல் போனபோது எனது மகள் சொன்னாள் “ jeg er kutt ut av verden jo”  என்றாள். உலகத்திற்கும் அவளுக்குமான தொடர்பு அறுந்து போய்விட்டதாக சொன்னாள். அவ்வளவு ஆக்கிரமிப்பு. இப்போதல்லாம் ஓடி விழையாடு பாப்பாக்களை பார்க்க முடிவதில்லை. சோபாவில் காலை நீட்டி சாய்ந்திருந்து லப்ரொப்பில் விளையாடும் பாப்பாக்களைத்தான் பார்க்க முடிகிறது.

 

காலையில் எழுந்ததும் MSN பின்பு காதுக்குள் செருகிக் கொள் ipot மாலை முழுவதும் facebook என வழக்கப் படுத்திகொள் பாப்பா. இதுதான் சராசரி இளவல்கள். கடிதம் எழுதும் கலாச்சாரத்தை என்றோ தொலைத்துவிட்ட எமது பிள்ளைகள்.

 

MSN, Facebook, Twitter போன்ற தொடர்பு தொழில்நுட்பங்களை கட்டாயம் நீங்கள் பயன்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்தே நீங்களும் வளர வேண்டும். ஆனால் அதை அளவுடன் நல்வழியில் பயன்படுத்துங்கள். இவற்றில் நீங்கள் அதிக நேரத்தை செலவிடும் போது, இயற்கையாக உங்களிடம் உள்ள திறமைகளை வெளிக் கொண்டு வர முடியாமல், அதற்கு பயிற்சி கொடுக்க முடியாமல் போய்விடுகின்ற சந்தர்பங்களே ஏராளம்.

 

வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு, பணிவான வேண்டுகோள். உங்கள் மத்தியில் குழுவாக்க போக்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். பொதுக் கருத்து தளங்களில் ஒன்றுபட்டு, நாம் ஒரு சமூகம்
எனும் உணர்வோடு, உங்கள் படைப்புகளை ஆற்றுகைப் படுத்துங்கள். "

- அன்ரனி தியோபிலஸ்

 

 

தற்போதய வாசகர்கள்

We have 4 guests online