|

நர்த்தன காவியா நடன நிகழ்வு 2010 - ஸ் ரீபன்
நர்த்தன காவியா ஆண்டு விழா 06.02.2010 அன்று sentrum scene மண்டபத்தில் நடைபெற்றது. விழா சரியாக 18.05க்கு ஆரம்பித்து 20.56க்கு நிறைவுக்கு வந்தது. 130 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தும் குறித்த நேரத்துக்குள் நிகழ்ச்சியை நிறைவு செய்ததை பாராட்டலாம்.
நிகழ்ச்சி நிறைவடைந்தபின்னும் பார்வையாளர்கள் மண்டபத்தை விட்டு வெளியேற மனமின்றி அமர்ந்திருந்ததே நிகழ்ச்சியின் வெற்றியைக் காட்டுகிறது.
நிகழ்ச்சியின் சிறப்பாக நான் கருதுவது பக்கவாத்தியக் கலைஞர்களும் பாடகர்களும் முற்றுமுழுதாக நோர்வேக் கலைஞர்களாக இருந்ததையே. இதுவரை யாரும் செய்யத்துணியாததை நடன ஆசிரியை திருமதி கல்யாணி தயாபரன் செய்திருக்கிறார். நிகழ்ச்சியில் பாடல்களைப்பாடிய ரமேஸ், திருமதி அபிராமி , திருமதி யாழினிநாதன் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எதற்கு இந்தியக் கலைஞர்கள் தங்களாலும் முடியும் என்பதை துணிவாக அழகாகப் பாடி நிருபித்திருக்கிறார்கள். அடுத்த நிகழ்வுகளிலும் இது தொடருமானால் நிச்சயமான எதிர்காலம் உண்டு. நிகழ்ச்சியின் நாயகன் மிருதங்க வித்துவான் சுந்தரமூர்த்தி (குட்டிமாஸ்டர்) அவர்கள்தான். நிகழ்ச்சியின் அமைப்பு அவருக்கு ஓய்வு கொடுக்கவேயில்லை. நிகழ்ச்சிகள் இடைவெளியின்றி நடந்ததால் மாஸ்டரும் வாசித்துக்கொண்டே இருந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது. சுந்தரமூர்த்தி அவர்கள் தனது திறமையை முழவதுமாக வெளிப்படுத்தியிருந்தார் இந்த மேடையில்.
நிகழ்ச்சிகள் இடைவெளியில்லாது நடந்தன. முதலில் அறிவிப்பாளர் வந்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தபின் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்குப் பின்பே மறுபடியும் வந்தார் ஒன்றரை மணிநேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்தது 8 நடனங்கள் தொடர்ந்து ஒரு நடனம் முடிந்து வணக்கம் சொல்லும் நேரம் அடுத்தது ஆரம்பம் என்பது போல. பரதநாட்டிய உருப்படிகள் ஆடப்பட்டாலும் இடையிடையே வந்த சின்னஞ்சிறுகிளியே . கற்பூரநாயகியே போன்ற நன்கு தெரிந்த பாடல்களும் அவை ஆடப்பட்ட விதங்களும் அருமை சில உருப்படிகள் வேறு வேறு விதங்களில் அந்த உருப்படிகளே Remix மாதிரி ஆடப்பட்டன வித்தியாசமான ஐடியாதான். வித்தியாசங்களை நாம் எப்போதும் வரவேற்போம். மாற்றங்கள் மட்டுமே மாறக்கூடியது.
5 வயதிலிருந்து 50 வயதுவரை இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தார்கள். ஆண்களும் பங்குபற்றியிருந்ததைக் குறிப்பிடலாம். நிகழ்ச்சியில் தாயகம் நோக்கி என்ற நாட்டிய நாடகம் வித்தியாசமாக இருந்தது. ஆதில் எப்படி வாழ்ந்த எம் தமிழர் சமுதாயம் எப்படி அழந்துபோகிறது என்பதை நிகழ்த்திக்காட்டினார்கள். படங்களில் வருவதுபோல் கதையின் முடிவில் நாட்டியம் ஆரம்பித்து பின் அவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்லி தொடங்கிய இடத்திலேயே நாடகம் நிறைகிறது. தாயக விடயங்களை படைக்கும்போது அவை எப்போதும் விமர்சனங்களுக்கு அப்பால் மனங்களுக்குள் சென்றுவிடுகின்றன வேறு எந்த விடயங்களிலும் பார்க்க தாயக நிகழ்வுகளைத் துணிந்து செய்யலாம் இன்னும் கொஞ்சக் காலத்துக்கு. இது நிச்சயம் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கும் நடன ஆசிரியை கல்யாணி தயாபரனிடம் இந்த நிகழ்ச்சி உங்களுக்குத் திருப்தியா என்று கேட்டதற்கு எனது நிகழ்ச்சிக்கு நானே கருத்துக்கூற முடியாது என்றாலும் பக்கவாத்தியக் கலைஞர்கள் அனைவரும் நோர்வேக் கலைஞர்களாய் இருந்ததும் அவர்கள் இவ்வளவு சிறப்பாக இசைவழங்கியதற்கும் பாடியதற்கும் தான் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடிந்ததே என்பதில் தனக்கு பூரண திருப்தி என்றார்.
திரு சுந்தர மூர்த்தி அவர்களிடம் பாடகர்கள் பற்றி கேட்டதற்கு அவர்கள் நன்றாகப்பாடக்கூடியவர்கள்தான் என்றாலும் இந்த நிகழ்ச்சியில் நான் எதிர்பார்த்ததை விட நன்றாகப் பாடினார்கள் என்றார். உண்மையிலேயே இந்தப் புகழ் இவர்களின் குருவிற்குத்தான் போகவேண்டும்.
நிகழ்ச்சியின் ஒரே குறை மேடையில் ஒரு பெரிய இடத்தை பக்கவாத்தியக் காரர்கள் பிடித்துவிட்டார்கள் குழு நடனங்களில் (எல்லாமே குழநடனங்கள்தான்) இடம் போதாமல் ஆரம்பத்தில் மாணவிகள் சிரமப்பட்டது தெரிந்தது. அண்மைக்காலங்களில் நோர்வேயில் நர்த்தன காவியாவின் நடன நிகழ்ச்சிகள்தான் தொடர்ந்து நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.75 குரோனர்கள் ரிக்கற் போட்டிருந்தும் 650பேருக்கும் அதிகமாக பார்வையாளர்கள் வந்திருந்தார்கள் என்பதை குறிப்பிடலாம்.
நன்றி : www.oslotamils.com |