இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50135முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
கவிஞர் சோதியாவின் ”உயிர்விதைப்பு” -கவிதைத் தொகுப்பு அறிமுகம் -ரூபன் சிவராஜா
மண்ணையும் மக்களையும் பேசாத, வெறுமனே கற்பனைகளையும் கனவுகளையும் பேசும் கலை இலக்கியங்கள் காலவோட்டத்தில் நின்று நிலைக்காதென்ற உறுதியான கருத்தை உண்மையாக உடையவர் கவிஞர் சோதியா (சிவதாஸ் என்று பலராலும் அறியப்பட்டவர்). இவர் நோர்வேயில் தமிழ்ப்பணி ஆற்றிவரும் அன்னை பூபதி கலைக்கூடத்தின் முதன்மைச் செயற்பாட்டாளரும் வழிகாட்டியுமாவார். உயிர்ப்பு மிக்கதும் விடுதலை தாகம் கொண்டதுமான பல கவிதைகளையும் பாடல்களையும் உருவாக்கியிருக்கின்றார். கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட, கவிஞர் சோதியாவின் ”உயிர் விதைப்பு” கவிதைத் தொகுப்பு பற்றிய சில குறிப்புகளை இங்கே பதிவு செய்கின்றேன். காலத்தினதும் சமூகத்தினதும் தேவை உணரப்பட்டு, அவற்றின் பிரதிபலிப்பாக படைப்புகள் வடிவம் பெறவேண்டுமென்ற கொள்கைக்கமைய தனது கவிதைகளைப் பிரசவிப்பதோடு மட்டுமிவர் நின்றுவிடுவதில்லை. ஏனைய படைப்பாளிகளின் படைப்புகளும் காலக் கண்ணாடியாக விளங்கவேண்டுமென்ற எண்ணத்தினால், அக்கருத்தை பல சமயங்களில் நெஞ்சுரத்தோடு வெளிப்படையாக் எடுத்துரைப்பவர். தனது கவிதையொன்றில் இப்படிச் சொல்கின்றார்:
வாடிக்கிடக்கும் நாற்றுக்கு / வார்க்கவொண்ணாத நீரெதற்கு
கவிதை இலக்கணம், கவிதை யாப்பு, சொற்களின் கட்டமைப்பு என்பன பற்றிய தெளிவான அறிதல் அற்றவன் நான் என்ற காரணத்தினால், இக்குறிப்பில் சோதியாவின் கவிதைகளின் பாடுபொருளும் அக்கவிதைகளால் உந்தப்பெறுகின்ற உணர்வுகளுமே எனது பேசுபொருளாக அமைகின்றன.
"உயிர் விதைப்பு"
அறுவடை நாள் நூலில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகள் 1988ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை எரிமலை, ஈழமுரசு, களத்தில், சுதந்திரதாகம் (90 களில் நோர்வேயில் வெளிவந்த மாத இதழ்) ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடு, போராளிகளின் நெஞ்சுறுதி, மாவீரர்களின் உன்னதமும் உயிர்ப்பும் மிக்க ஈகம், மக்களின் அவலம், போரின் வடுக்கள், பெண்ணுரிமை, போராட்டத்தில் பெண்களின் பங்கு, புலம்பெயர் சுழலின் சோகங்கள் எனப் பல தளங்களில் உண்மைகளும் உணர்வுகளும் இதில் பதிவாகியிருக்கின்றன.
தமிழ்ச் சமூகத்தில் கிளைபரப்பிய விசமரமான பெண்ணடிமைத்தனப் போக்கை எதிர்க்கின்ற, கண்டிக்கின்ற பெண்ணின் குரலாய் வெளிப்படுகின்ற ஒரு கவிதை பின்வருமாறு அமைந்திருக்கின்றது:
பெண்! / அடங்கியாளப்பட வேண்டியவளா? / அடங்கிப்போக வேண்டியவளா?
தமிழின வரலாற்றில் என்றுமே மறக்க முடியாததும் - சிங்கள இனவாதம் தந்த அவலத்தின் உச்சமான யாழ் இடப்பெயர்வை பதிவு செய்யும் பின்வரும் வரிகள் நெஞ்சை கனக்க வைக்கின்றது..எதை எடுப்பது / எதைத் தவிர்ப்பது /எல்லாப் பொருட்களிலும்
இனி உயிர்விதைப்பு மீது பார்வையைக் குவிப்போம். தலைப்பிற்கு மிகப்பொருத்தமான அட்டைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. எமது தேசத்தின் நாயகர்கள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவதான ஆழமான அர்த்தப் பரிமாணமத்தைத் தருகின்றது. (ஓவியர் தயாவின் கோட்டோவியம் வர்ணமூட்டப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது.) தமிழீழத்தின் விடுதலைக்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். “இவரின் கவிதைகளும் பாடல்களும் உண்மையுடன் ஜுவகளை கொண்டு விளங்குகின்றன. பாடும் ஒவ்வொரு வரியும் பொய்யேதும் புனையாமல் பொலிகின்றன” என்று தாயகக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். கையடக்கமான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூலில், 90ம் ஆண்டிலிருந்து 2003ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கவிஞரால் உருவாக்கப்பட்ட இருபத்தைந்து கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவற்றில் பலவும் இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் வெளிவந்தவை. மாவீரர் நினைவெழுச்சி நாட்களில் விருத்தமாக இசைக்கப்பட்ட கவிதைகளும் இதில் அடக்கம். பெரும்பாலான கவிதைகள்;; களத்தில் பகை வென்ற புலிவீரர், காற்றில் வெடித்த கரும்புலிகள், கடல் மடியில் காவியமான கடற்புலிகள் என்று தாயகத்தின் விடிவிற்காகவும் தமிழினத்தின் நிமிர்ந்த வாழ்விற்காகவும் தம்மை அர்ப்பணித்த எம் தேசத்தின் மீட்பர்களை ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்தியம்புகின்றன...
நேற்று வரை எம் நேர் வந்த வீரர் / நீள்துயில் கொள்ளுமொரு கல்லறை அருகில் ஏற்றிய சுடரை இருகை பற்றிட / கடைவிழிக் கண்ணீர் கரை உடைக்கும்
சிங்கள இனவாதப் பூதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாதக் கொடுமை உச்சத்தைத் தொட்ட போது தமிழ்த் தேசிய எழுச்சி முகிழ்த்தெழுந்து- தாயக விடுதலைப் போராட்டமாக எழுச்சி கொண்டது. தாயக விடுதலை நோக்கிய போராட்டம் முனைப்புடன் வளர்ச்சியடைந்து, இன்று வரலாற்றில் முதன்முறையாக தமிழினத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான படைபலம் தோற்றம் பெற்றிருக்கின்றது.
உலகில் இன்று தமிழர்கள் பலம் பொருந்திய நிலையில் தலை நிமிர்வோடு வாழ்வதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வலிமையே காரணமாகும். இவ் வரலாற்று உண்மைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றதும் - தமிழீழத் தேசியத்தலைவரின் வியத்தகு மதிநுட்ப வழிநடத்தலிலும் போராளிகளின் தீரமிகு போராற்றலாலும் மீட்கப்பெற்ற இராணுவத்தள வெற்றிகளும் நிலமீட்பு போர்களும் பல கவிதைகளில் பதிவாகியிருக்கின்றது..
முல்லைப் பெருங்கடல் மூச்சிரைத் திருக்க /முழுநிலவும் ஒருமுறை விடுமுறை கேட்டது
தமிழினத்தின் கூன் நிமிர்த்திய தமிழீழத் தேசியத் தலைவரை இப்படிப் பாடுகின்றார்.. பிரபாகரன்! / பிரமையா…? / பிரமிப்பா…? விடுதலையை நேசிக்கின்ற நெஞ்சங்களின் உணர்வின் வெளிப்பாடாக, உரிமைப் போராட்டதின் நியாயத்தன்மைக்கு வலுச்சேர்க்கின்ற வீரியமான வரிகள் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கின்றது.
தேச விடுதலையின் பால் அக்கறை கொள்ளாது ஒதுங்கி நிற்பவர்களை நோக்கி, விடுதலை எல்லோருக்குமானதென்ற யதார்த்த நிலையை எடுத்துரைக்கும் எண்ணத்தில் உதித்த கவிதை ஒன்றில்; விடுதலைக்கான பங்களிப்பில் தன்னை இணைத்துக்கொள்ளாத ஒருவர் தேசத்தின் இன்றைய எழுச்சியிலும் வளர்ச்சியிலும் தன்பங்கு இல்லையென்ற குற்ற உணர்வில் கூனிக்குறுகுவதை இப்படிச் சொல்கின்றார்..
இத்தனை வருடமாய் என் செய்தேன்? / என் தேசத்திற்காய் ஏது செய்தேன்?
புலம்பெயர் வாழ்வில், அதன் இயந்திர இயக்கத்தின் இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்தலில் எதிர்கொள்கின்ற சோகம், தொலைந்து போன நிம்மதி மீதான ஏக்கம், ஒட்டாத வாழ்வு, ஒட்டிக்கெண்ட துயரம் என்பன மீதான விமர்சனம் மிக எளிமையான மொழியில் வெளிப்பட்டிருக்கின்றது. “இலையுதிர் காலம்” என்ற தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள ஒரு கவிதை புலம்பெயர் சமூக வாழ்வியல் சு10ழலை- அச்சு10ழல் தமிழ்ச் சமூகப் பரப்பில் ஏற்படுத்துகின்ற ஆபத்தான தாக்கத்தை ஆழமாகச் சித்தரிக்கின்றது.தேசவிடுதலை, இனமானம் காத்த மாவீரர் தியாகம்,புலம்பெயர் வாழ்வியல் என்று தான் வாழும் காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் கையிலெடுத்து, சமூகப் பிரக்ஞையுடைய கவிதைகளை யாத்து வரும் சோதியாவின் கவிதைகள் தமிழ் இலக்கியப்பரப்பில் பேசப்படும். ஏனெனில் அவை மக்களுக்கான படைப்புகள்.
-ரூபன் சிவராஜா |

